உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெஞ்சு பொறுக்குதில்லையே... இதய நோயாளிகள் இருமடங்கு; டாக்டர்கள் ஒருமடங்கு : மதுரை அரசு மருத்துவமனையில் மூச்சு திணறும் நிர்வாகம்

நெஞ்சு பொறுக்குதில்லையே... இதய நோயாளிகள் இருமடங்கு; டாக்டர்கள் ஒருமடங்கு : மதுரை அரசு மருத்துவமனையில் மூச்சு திணறும் நிர்வாகம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை இதயநோய்ப் பிரிவில் தினமும் 500 நோயாளிகளும் இதய அறுவை சிகிச்சை பிரிவிற்கு நுாற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளும் வரும் நிலையில் டாக்டர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளது. இதயநோய்ப் பிரிவில் மாதத்திற்கு 12 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். குறிப்பாக மதுரையைச் சுற்றி 10 மாவட்டங்களில் உள்ள 23 தாலுகா மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் இங்கு வருகின்றனர். உள்நோயாளியாக மாதம் 300 முதல் 400 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இங்குள்ள 3 கேத்லேப் கருவிகள் மூலம் மாதம் 450 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பல்நோக்கு மருத்துவப் பிரிவு உட்பட 12 இடங்களில் எக்கோ பார்ப்பதற்கான கருவிகளை இயக்க வேண்டும். தற்போது ஒரு பேராசிரியர், ஒரு இணைப்பேராசிரியர், 5 உதவி பேராசிரியர்களே பணியில் உள்ளனர். 35 ஸ்டாப் நர்ஸ்கள், 5 தற்காலிக நர்ஸ்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உட்பட பல்வேறு பிரிவுகளில் 15 பேர் வேலை செய்கின்றனர். இவையெல்லாம் ஒரு யூனிட் அளவு நோயாளிகளுக்கான கட்டமைப்பாக மட்டுமே உள்ளன. ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை இரு மடங்கு உள்ளது. முதுநிலை டாக்டர்கள், டிப்ளமோ, சர்டிபிகேட் படிக்கும் மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டும். 'ஆஞ்சியோகிராம்' செய்யும் போதே நோயாளிகளின் பிரச்னையைப் பொறுத்து உடனடியாக அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும். எனவே இதய மருத்துவ, இதய அறுவை சிகிச்சை துறைகள் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. அறுவை சிகிச்சை துறையிலும் ஒரு பேராசிரியர், ஒரு இணைப்பேராசிரியர் பணியிடங்களே உள்ளன.மாநில அளவில் இதயநோய் சிகிச்சையில் முதலிடம் பெற்றுள்ள மதுரை அரசு மருத்துவமனையில் இதய நோய், அறுவை சிகிச்சை டாக்டர்கள் மட்டும் பணிச்சுமையால் மூச்சு திணறுகின்றனர்.

சொன்னதை செய்யவில்லை

ஜப்பான் நாட்டு கூட்டுறவு முகமை கடன் திட்டத்தின் கீழ் ரூ.323 கோடியில் கட்டப்பட்ட ஜெய்க்கா கட்டடத்தில் கூடுதல் பிரிவாக இதய நோய், இதய அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இதற்கு மட்டும் தனி ஆட்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்த நிலையில் இரண்டாண்டுகளாக பணி நியமனம் நடைபெறவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை, படுக்கை வசதி, கேத்லேப், அறுவை சிகிச்சை அரங்குகளை கணக்கிட்டு இதே போல இன்னொரு யூனிட் அளவிற்கு டாக்டர்களையும் அதற்கேற்ப நர்ஸ், பிற பணியாளர்களையும் நியமிக்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
நவ 25, 2025 11:20

கண்டவனுக்கு கார் வித்து, ரயில் உட்டு பொல்யுய்ஷனை அதிகப்படுத்துனா இதய நோய் என்ன, எல்லா நோய்க்கும் டாக்டர்கள் தட்டுப்பாடு வரும். வல்லரசு ஆகணும்லா


புதிய வீடியோ