| ADDED : நவ 22, 2025 04:28 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் 8 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தைகளின் இறப்பு 20 சதவீதமாக இருந்த நிலையில் கடந்தாண்டு 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. குழந்தைகள் நலத்துறை, சிறுநீரகத் துறை சார்பில் மதுரை அரசு மருத்துவ மனையில் தேசிய பச்சிளம் குழந்தைகள் நல வாரவிழா நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் பேசியதாவது: இங்கு 2024ல் 13ஆயிரத்து 118 குழந்தைகள் பிறந்தன. அதில் 15 சதவீதம் குறை பிரசவ குழந்தைகள். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 4222 குழந்தைகளில் 47 சதவீதம் குறைமாத பிரசவத்தில் பிறந்தவர்கள். இதில் 226 குழந்தைகள் ஒன்றரை கிலோவுக்கு குறைவான எடையில் பிறந்து சிகிச்சை பெற்றுள்ளனர். தென் தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்த டாக்டர்கள் பணியில் உள்ளனர். 8 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தைகளின் இறப்பு 20 சதவீதமாக இருந்த நிலையில் கடந்தாண்டு 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான 'வார்மர் இன்குபேட்டர், ஹை ப்ரீகுன்சி வென்டிலேட்டர் கருவிகள், நைட்ரிக் ஆக்ஸைடு நிரோ மானிட்டர்கள்' கருவிகள் உள்ளன. தாய்ப்பால் வங்கியும் செயல் படுகிறது என்றார். மருத்துவ கண்காணிப் பாளர் குமரவேல், துணை கண்காணிப்பாளர் செல்வ ராணி, ஆர்.எம்.ஓ., முரளி தரன், குழந்தைகள் நலத்துறை இயக்குநர் அனுராதா, பச்சிளம் குழந்தைகள் நலத்துறைத் தலைவர் அசோக்ராஜா கலந்து கொண்டனர்.