| ADDED : நவ 26, 2025 05:05 AM
மதுரை: அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டாலும் அரசு செவிமடுக்காததால் போராட்டத்தை நடத்துவதாக தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நிலஅளவைத்துறைஅலுவலர் சங்க மாநில தலைவர் மகேந்திரகுமார் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாநில மாநாட்டிலும், அதன் பின்பும் கொடுத்த கோரிக்கைகள் எதற்கும் அரசிடம் பதில் இல்லை. இத்துறையில் களப்பணியாளர்கள் மீது சிலர் அளிக்கும் புகார்களை விசாரணையும் இன்றி நேரடியாக தண்டனை என்ற பெயரில் பணியிட மாறுதல் வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. புகார்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டால் ஏப்ரல், மேயில் மட்டும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். நிலஅளவைத் துறையில் 1042 குறுவட்ட அளவர் பணியிடங்கள் தரம் இறக்கப்பட்டது. அதில் 540 பணியிடங்கள் மீண்டும் குறுவட்ட பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது. மீதியுள்ள 502 குறுவட்ட அளவர் பணியிடங்களை தரம் உயர்த்த கோரிக்கை விடுத்தும் இன்று வரை கிடப்பில் உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும். தமிழகத்தில் 50 குறுவட்ட அளவர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டது. அதன்பின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல புதிய குறுவட்டங்களுக்கு களப்பணியாளர், சார் ஆய்வாளர் நியமிக்க எந்தப் பரிந்துரையும் இல்லாதது ஊழியரிடம் கோபத்தை உருவாக்கி உள்ளது. நிலஅளவை களப்பணியாளரை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் மேற்பார்வையாளராக நியமித்தது ஏற்புடையது அல்ல. அவர்களுக்கு ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் பணிகளையும் கொடுக்கின்றனர். அவர்களை களப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இதுபோன்று ஒன்பது அம்சங்களை வலியுறுத்தி நவ., 25, 26 ல் தற்செயல் விடுப்பு எடுத்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நவ., 28 ல் காலை 11:00 மணிக்கு இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளோம். அரசு எங்களை அழைத்துப்பேசாவிடில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு துாண்டி விடுவதாகவே கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.