| ADDED : ஆக 19, 2011 04:56 AM
மேலூர்:மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தொகுதியில் பெரியாறு கால்வாய் மற்றும்
கண்மாய்களை மேம்படுத்தும் பணிக்கு ரூ.4.08 கோடி ஒதுக்கப்பட்டது. கீழவளவு
பகுதியில் ஒரே நேரத்தில் 24 மடைகள் கட்டும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.செப்டம்பரில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர், மேலூர்
பகுதிக்கு திறக்கப்படும். இதனால் வரத்து மற்றும் கிளைக் கால்வாய்கள்,
கண்மாய்களில் மடைகள் பழுது பார்க்கப்படுகிறது. கீழையூர் இருவந்தான்
கண்மாய், தனியாமங்கலம் கண்மாய், சாத்தமங்கலம் நரிபாஞ்சான் கண்மாய் உட்பட 18
கண்மாய்களில் 24 புதிய மடைகள் கட்டும் பணி நடக்கிறது. ஒரு மடைக்கு ரூ. 2
லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. பொது பணித்துறை செயற் பொறியாளர் அப்துல் ரசீத் கூறியதாவது: பெரியாறு மெயின்
கால்வாயில் 30வது கிலோ மீட்டரில் இருந்து சிவகங்கை மாவட்டம் வரை உள்ள 83
கி.மீ., தூரத்திற்கான கால்வாய் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தாண்டு பராமரிப்புக்கென ரூ.4 கோடியே 8 லட்சத்து 81 ஆயிரம்
ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இரு மடங்கு அதிகம். இதனால் மராமத்து
பணிகள் மட்டுமின்றி, புதிய பணிகளும் நடக்கின்றன, என்றார். உதவி செயற்
பொறியாளர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ஸ்ரீதரன்
உடனிருந்தனர்.