மதுரை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 2.28 சதவீதம் அதிகரித்து, மாநில ரேங்க் பட்டியலில் 18 வது இடத்தில் இருந்த மதுரை 11வது இடத்திற்கு முன்னேறியது.மாவட்டத்தில் 486 பள்ளிகளை சேர்ந்த 37,660 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 17,301, மாணவிகள் 18,125 என 35,426 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி 94.07 சதவீதம். இது கடந்தாண்டை (91.79) விட 2.28 சதவீதம் அதிகரித்துள்ளது. 21 அரசு, 7 மாநகராட்சி, 98 மெட்ரிக் உட்பட 163 பள்ளிகள் 'சென்டம்' தேர்ச்சி பெற்றன. இதன் மூலம் மாநில அளவில் 18 வது இடம் வகித்த மதுரை, 11வது இடத்திற்கு முன்னேறியது. கணிதத்தில் கலக்கல்
மாவட்டத்தில் தமிழ் தவிர பாட வாரியாக 1667 மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர். அதில் அதிகபட்சமாக கணிதத்தில் 1021 மாணவர்கள் சென்டம் வென்று சாதித்தனர். ஆங்கிலம் 15, அறிவியல் 371, சமூக அறிவியல் 260 பேர் 'சென்டம்' பெற்றனர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 1110 'சென்டம்' பெற்றனர். அரசு பள்ளி சாதனை
எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுஷ்யா 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். இவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 'சென்டம்' பெற்றுள்ளார். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கணேசன், கிராம கல்விக்குழு தலைவர் நாகஜோதி மற்றும் பெற்றோர்களும், மாணவர்களும் பாராட்டினர். இதுபோல் நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பள்ளி மாணவி ரித்திகா, மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி தேவஸ்ரீ ஆகியோர் தலா 493 மதிப்பெண்கள் பெற்று சாதித்தனர். ஆசிரியர்களுக்கு பாராட்டு
சி.இ.ஓ., கார்த்திகா கூறியதாவது: பள்ளிகளில் மாதாந்திர தேர்வு நடத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தப்பட்டது. தேர்ச்சி குறையும் என கணிக்கப்பட்ட பள்ளிகள் முன்கூட்டியே கணக்கெடுக்கப்பட்டு அப்பள்ளிகளை டி.இ.ஓ.,க்கள், டி.ஐ.,க்கள் (பள்ளித் துணை ஆய்வாளர்) மூலம் தொடர்ந்து கண்காணித்து தேர்ச்சி பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.மேலும் அரையாண்டு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் சிறப்பு வழிகாட்டி தயாரித்து வழங்கியது போன்ற காரணங்களால் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாவட்ட ரேங்க்கிலும் முன்னேற்றம் கிடைத்துள்ளது. தேர்ச்சிக்காக உழைத்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.