உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மீனாட்சி அம்மன் கோயில் சொத்து விவரங்கள் மேட்ச் ஆகவில்லை அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

 மீனாட்சி அம்மன் கோயில் சொத்து விவரங்கள் மேட்ச் ஆகவில்லை அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை பாதுகாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கோயில் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்கள் வருவாய் தரப்பின் விவரங்களுடன் பொருந்தாததால் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. அக்., 7 விசாரணையின் போது கோயில் தரப்பு: மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களுக்கு 12 மாவட்டங்களில் 1233.98 ஏக்கர் நிலம் உள்ளது. மதுரை செல்லுாரில் 8.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. வாடகைதாரர்களாக தொடராதவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆவணங்களை தாக்கல் செய்தது.மனுதாரர் ஆவணங்களை படித்து பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அக்., 23விசாரணையின் போது மனுதாரர்: எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆவணங்களில் விளக்கவில்லை.தீவிபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை நுட்பமாக மேற்கொள்ளாமல் கும்பாபிஷேகத்தையொட்டி அவசரமாக பணி நடக்கிறது. திருப்பணிக்கு கோயில் டெபாசிட் தொகையை பயன்படுத்தக் கூடாது என்றார். கோயில் தரப்பு: திருப்பணிக்கு கோயில் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை. வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகள் பழமை மாறாமல் கலையம்சத்துடன் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன என்றது.நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்: நுாற்றுக்கணக்கான ஏக்கருக்கு பட்டா மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளன. தேவஸ்தானம் சார்பில் எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளனஎன சமர்ப்பித்தால் வருவாய்த்துறைக்கும் ஒருங்கிணைந்து உத்தரவிட முடியும். நீதிபதிகள்: கோயில் தரப்பிடம் உள்ள சொத்து விவரங்கள், வருவாய்த்துறையின் விவரங்களோடு ஒத்துப்போகவில்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என்ன செய்யலாம். வருவாய் தரப்பு: கோயில் தரப்பு விவரங்கள் பழையது. அதற்கு தீர்வு காண, மாறுதல்கள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விளக்க தயாராக உள்ளோம். நீதிபதிகள்: மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் அலுவலகத்தில் இரு தரப்பு கூட்டம் நவ.,22 காலை 11:00 மணிக்கு நடத்தப்பட வேண்டும். வருவாய் தரப்பினர் சொத்து விவரங்களை சமர்ப்பித்து கோயில் விவரங்களுடன் சரிபார்க்க வேண்டும். பிரசாதம் அல்ல மனுதாரர்: கோயில் புனரமைப்பு பணியில் தொன்மையான சின்னங்களை மறைக்கும் வகையில் கற்கள் பதிக்கின்றனர். பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் வர்த்தக நோக்கத்திற்காக உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. மடப்பள்ளியில் தயார் செய்து இறைவனுக்கு படைக்கப்படுவது மட்டுமே பிரசாதம். ஆனால் அவை பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பக்தர்களுக்காக வன்னிமரத்தடி விநாயகர், கல் மண்டபம் அருகே விறகடுப்பில் தயார் செய்யப்படுவதால் சிற்பங்களில் புகை படிகிறது. கோயில் தரப்பு: நாள் முழுதும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் அங்கு தயாரிக்கப்படுகிறது. விறகுக்கு பதில் காஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. நீதிபதிகள்: இறைவனுக்கு படைத்து வழங்கப்படாதது எதுவும் 'பிரசாதம்' கிடையாது. நீங்கள் நடத்துவது உணவகம் போன்றது. கோயிலுக்கு வருமானம் வரும் நோக்கில் இவை தயார் செய்யப்படுகின்றன. கோயிலுக்குள் சமையல் செய்பவர்களின் எண்ணிக்கை குறித்தும், சொத்து விவரங்கள் குறித்தும்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு நவ.,26க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை