| ADDED : நவ 17, 2025 02:13 AM
மதுரை: கூட்டுறவுத் துறையில் வயதானவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தில் மதுரை மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் மூர்த்தி பெருமிதம் தெரிவித்தார். மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பேசியதாவது: கூட்டுறவுத் துறையில் தமிழக அளவில் மதுரை முதலிடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. கூட்டுறவு வங்கிகள் மூலம் மாவட்டத்தில் ரூ. 133கோடி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தொழில் வளர்ச்சியை பெருக்கி, கடனை திருப்பி செலுத்த முடியும். 'ஒரு நாடு, குடும்பம் முன்னேற வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள பெண்கள் பொருளாதாரத்தில் மேம்படுவது அவசியம்' என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்ப கொரோனா பாதிப்பின்போது பெண்கள் பெற்றிருந்த கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தது, உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை அளிப்பது உட்பட பெண்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார். விழாவில் 2153 பயனாளிகளுக்கு ரூ. 11.25 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். 24 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. இணைப் பதிவாளர்கள் சதீஸ்குமார், வாஞ்சிநாதன், மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.