| ADDED : நவ 24, 2025 05:23 AM
மதுரை: மதுரையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போதிய பாசஞ்சர் ரயில்கள் இல்லாததால் பஸ்களை பயணிகள் நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பாசஞ்சர் ரயில்களை இயக்க எதிர்பார்க்கின்றனர். மதுரையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வெளிமாவட்டங்களுக்கு பணி நிமித்தமாக பயணிக்கின்றனர். மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது ஓடிய பல ரயில்கள் தற்போது இல்லை. கொரோனா காலத்திற்கு முன் இயக்கப்பட்ட பல பயணிகள் ரயில்கள், 200 கி.மீ.,க்கு மேல் செல்வதை காரணம் காட்டி விரைவு ரயில்களாக மாற்றப்பட்டன. இதனால் சிறிய ஸ்டேஷன்களில் பெரும்பாலான ரயில்களுக்கான நிறுத்தங்கள் நீக்கப்பட்டன. பராமரிப்பால் அவதி தற்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3, போடி, திண்டுக்கல், செங்கோட்டைக்கு தலா ஒரு பாசஞ்சர் ரயில் மட்டுமே இயக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் இருந்து 11, திருச்சியில் இருந்து 17 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், மதுரையில் இருந்து போதுமான ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் பஸ்களை தேடிச்செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர். முன்பு செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட 3 பாசஞ்சர்களில் ஒன்று மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணியால் அந்த ரயில் பல மாதங்களாக மதுரை வராமல் மாற்றுப்பாதையில் செல்கிறது. இதனால் ராஜபாளையம், சிவகாசி பகுதி மக்களுக்கு மதுரை வர காலையில் ரயில் சேவை இல்லை. மதுரை - காரைக்குடி இடையே மானாமதுரை வழியாக பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. போடியில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு காலை 6:30 மணிக்கு மதுரை வரும் வகையில் பயணிகள் ரயில் இயக்கினால், தேனி மாவட்ட மக்கள் வைகை, கோவை இன்டர்சிட்டி, ராமேஸ்வரம், செங்கோட்டை பாசஞ்சர்களில் செல்ல 'கனெக்டிவிட்டி' கிடைக்கும். பற்றாக்குறை திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பயணிகள் நலக்கூட்டமைப்பு செயலாளர் நஜிப் கூறுகையில், ''அருப்புக்கோட்டை - மதுரை இடையே நேரடி ரயில் போக்குவரத்து இல்லை. சுங்கக்கட்டண உயர்வால் தனியார் பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. எனவே மதுரை - விருதுநகர் இடையே மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக பயணிகள் ரயில் இயக்க வேண்டும்'' என்றார். ரயில்கள் அதிகம் இயக்கினால் தான் மக்களும் அதிகம் பயன்பெற முடியும். ஆனால் ஓட்டுநர், ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் பயணிகளுக்கு தேவையான ரயில்களை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.