| ADDED : ஜன 14, 2024 05:47 AM
மதுரை : மதுரையில் ஒரு வாரத்தில் இரு நிறுவனங்களிடம் இருந்து ரூ.1533 கோடி மதிப்பிலான 45.6 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.மதுரா மில்ஸ் பிரைவேட் லிட்.,க்கு நுாறாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டிருந்த ரூ.600 கோடி மதிப்பிலான அரசு நிலம் விதிமீறல் காரணமாக மீட்கப்பட்டது. தற்போது மதுரா கோட்ஸ் எனப்படும் மதுரா மில்ஸ் கம்பெனி லிட்.,க்கு 1923 மற்றும் 1925ம் ஆண்டுகளில் மதுரை புதுார் ரேஸ்கோர்ஸ் காலனியில் தரை வாடகை அடிப்படையில் 14 ஏக்கர் 52 சென்ட் அரசு நிலம் வழங்கப்பட்டது. இந்த நில ஒப்படைப்பானது விதிமீறல் என்ற அடிப்படையில் சென்னை நில நிர்வாக கமிஷனர் நாகராஜன் ஆணைப்படி கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.600 கோடியாக உள்ள நிலையில், ஜன., 6ல் நிலம் மீட்கப்பட்டது.மதுரை அழகர்கோவில் ரோடு மூன்றுமாவடி சந்திப்பு அருகில்உள்ள 31.10 ஏக்கர் நிலம் 1912ல் பெண்களுக்கான தொழில் மையம் அமைத்திட அமெரிக்கன் போர்டு ஆப் மிஷன் பெயருக்கு நிபந்தனைகளுடன் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலம் வழங்கப்பட்ட நோக்கத்திற்கு முரணாக தற்போதைய நிர்வாகமான தென்னிந்திய திருச்சபை திருமண்டில மறைந்த பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் அந்நிலங்களை விற்பனை செய்துள்ளார். ஐ.ஐ.எப்.எல். ரியால்டி லிட்., நில விற்பனையாளருக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்ட விற்கப்பட்டுள்ளது. மேலும் வியாபார நோக்கில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. எனவே நிலத்தினை அரசு வசம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜன.,11ல் நில நிர்வாக கமிஷனர் நாகராஜன் உத்தரவுபடி விற்பனை உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.933 கோடி.ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1533 மதிப்புள்ள 45.6 ஏக்கர் அரசு நிலம் மதுரையில் மீட்கப்பட்டுள்ளது.