உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பள்ளி மாணவர்களின் காலை உணவு துாய்மை பணியாளருக்கு வினியோகம் தாமத விடுமுறை அறிவிப்பால் மாற்று ஏற்பாடு

 பள்ளி மாணவர்களின் காலை உணவு துாய்மை பணியாளருக்கு வினியோகம் தாமத விடுமுறை அறிவிப்பால் மாற்று ஏற்பாடு

மதுரை: மதுரையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்களின் காலை உணவு மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு வழங்கி வீணாவது தடுக்கப்பட்டது. மாவட்டத்தில் மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை கலெக்டர் பிரவீன்குமார் காலை 7:25 மணிக்கு வெளியிட்டார். இதனால் மாணவர்களுக்கான காலை உணவு யாருக்கு வழங்குவது என கேள்விக்குறியானது. விடுமுறை அறிவிப்புக்கு முன்பே சில பள்ளிகளில் மாணவர்கள் நனைந்து கொண்டே சென்றுவிட்டனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், மீதமான உணவை காலை 11:00 மணிக்கு மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. சில இடங்களில் காலை உணவை பெற்றோர் வந்து பெற்றுச் சென்றனர். சி.இ.ஓ., தயாளன் கூறுகையில், கிராமப்புற பள்ளிகளில் பெரும்பாலும் அதன் அருகிலேயே மாணவர்கள் உள்ளதால் அவர்களின் வீடுகளுக்கே சென்று வினியோகிக்கப்பட்டது. நகரில் மீதமான உணவை துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி வீணாவது தவிர்க்கப்பட்டது என்றார். பெற்றோர் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்தது. காலையிலும் தொடர்ந்தது. மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் இருந்தபோதும் காலை 7:30 மணிக்கு மேல் தான் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழைக்காலத்தில் முன்கூட்டியே விடுமுறை அறிவித்தால் மாணவர்களின் அலைச்சல் தவிர்க்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி