| ADDED : நவ 18, 2025 04:18 AM
அவனியாபுரம்: ''எஸ்.ஐ.ஆரால் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது'' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேசினார். அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் அவனியாபுரம் பிரசன்னா காலனியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது: எஸ்.ஐ.ஆர்., ஐ நடைமுறைப்படுத்துவது தமிழக அரசு ஊழியர்கள்தான். ஆனால் அதற்கு எதிராக தி.மு.க., போராடுகின்றனர். பிரச்னைகளை மடைமாற்றம் செய்வதற்காகத்தான் எஸ்.ஐ.ஆரை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. விரகனுாரில் இருந்து அவனியாபுரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் தியாகராஜன் கூறியிருந்தார். தற்போது வரை அதற்கான ஆரம்பகட்ட பணிகள்கூட துவங்கவில்லை. தொழில்நுட்ப பூங்காவுக்கு நிலங்கள் கையகப்படுத்தி முடிக்கப்படவில்லை. ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது. மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை பொதுமக்கள் விரும்பவில்லை. 'சார்' என்றாலே தி.மு.க., வுக்கு அலர்ஜி தான். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற 58 மாதங்களுக்கு பின்புதான் மகளிர் உதவித் தொகை வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி ஒவ்வொரு மகளிருக்கும் ரூ. 58 ஆயிரம் கடன்பட்டுள்ளது என்றார்.