| ADDED : நவ 20, 2025 05:23 AM
மதுரை: மதுரையில் வ.உ.சி., நினைவு தினத்தை முன்னிட்டு தியாகத் திருவுருவம் வ.உ.சிதம்பரனார் சமூக நலப்பேரவை சார்பில் கூட்டம் நடந்தது. பேரவைத் தலைவர் சண்முகம் பேசுகையில் ''வ.உ.சி., தமிழுக்கு ஆற்றிய பணி அதிகம்.இலக்கியம், இலக்கணம், சைவம் தொடர்பான ஆராய்ச்சிக்காக 24 ஆண்டுகள் செலவிட்டார். அதை போற்றும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கு வ.உ.சி., பெயரை சூட்ட வேண்டும்'' என்றார். மதுரைக் காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் அழகப்பன் பேசுகையில், ''வ.உ.சி., பன்மொழிப் புலவர்.தெல்காப்பியம் உள்ளிட்ட பல்வேறு நுால்களை பதிப்பித்துள்ளார். அவரது முழு ஆளுமையை தமிழ்ப்பணி வாயிலாக அறியமுடியும்'' என்றார். அரசு சார்பில் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது, வ.உ.சி., பெயரில் வழங்கவேண்டும். தமிழ் வளர்க்க, அவரது பெயரில் தனித்தமிழ் கல்லுாரி துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக பேரவை செயலாளர் ராமசுப்பிரமணியம் தலைமையில், செயற்குழு உறுப்பினர்கள் சண்முக சுந்தரம், செந்தில்குமார், துணைச் செயலாளர் காளீஸ்வரன், தனபால், முருகேசன் உள்ளிட்டோர் சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி., சிலைக்கு மரியாதை செலுத்தினர்.