துவரிமான் - பரவை இடையேயான பாலம் பயன்பாட்டுக்கு எப்ப வருமோ; 500 மீ., அணுகுசாலை இல்லாமல் 10 ஆண்டுகளாக பாதிப்பு
மதுரை: மேலக்கால் ரோட்டில் துவரிமான் - பரவை இடையே பாலம் கட்டி பத்தாண்டுகளுக்கு மேலாகியும் அணுகுசாலை இல்லாததால் வாகன போக்குவரத்துக்கு பயன்பாடின்றி உள்ளது. இப்பாலம் முடிவடைந்தால் பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் வாகனங்களால் வைகை தென்கரையில் போக்குவரத்து நெரிசல் குறையும். மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகருக்குள்ளும், வைகை ஆற்றின் மீதும், கரையோரமும் நெடுஞ்சாலைத் துறையினர் ஏராளமான ரோடுகள், பாலங்களை அமைத்துள்ளனர். மதுரை நகருக்குள் நெரிசலால், மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டின் ஒருபிரிவு பரவைக்கும், மற்றொரு பிரிவு மாட்டுத்தாவணிக்கும் சென்றது. பரவையில் புதிதாக மார்க்கெட் உருவானது. இங்கு தென்மாவட்டங்கள், பொள்ளாச்சி, கோவை உட்பட மேற்கு மாவட்டம், ஓசூர், பெங்களூரு பகுதியில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. அணுகுசாலை இல்லை இங்கு செல்லும் வாகனங்களால் வைகையின் வடபுறம் திண்டுக்கல் ரோடு, தென்புறம் மேலக்கால் ரோட்டில் கனரக வாகன போக்குவரத்து அதிரிக்கிறது. எனவே, வைகை வடகரையோரம் 8 கி.மீ., ரோடு அமைக்கப்படுகிறது. இதேபோல 10 ஆண்டுக்கு முன் மேலக்கால் ரோட்டில் துவரிமானில் இருந்து வைகையின் வடபகுதியில் பரவையை இணைக்கும் வகையில் 10 மீட்டர் அகல பாலம் கட்டப்பட்டது. அதற்கு வடகரை பகுதியில் பரவையை இணைக்க முறையான அணுகு சாலை இல்லாததால் போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது. இதனால் 5 ஆண்டுகளாக பாலம் பயன்பாடின்றி உள்ளது. பரவை பகுதியில் இருந்து பாலத்திற்கு செல்ல கிராமச் சாலையாக இருந்த 5 மீட்டர் அகல ரோடுதான் பயன்பாட்டில் உள்ளது. இதில் சிறிய வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பரவை வியாபாரிகள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். முடிவுக்கு வரும் வழக்குகள் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தப் பாலத்திற்கு வடகரை பகுதியில் 500 மீட்டருக்கு அணுகுசாலை வேண்டி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 7 வழக்குகளில் தடையாணை பெறப்பட்டது. இவற்றில் 5 முடிவுக்கு வந்துவிட்டன. மீதி 2 வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும். தடை விலக்கப்பட்டால் உடனே பணி துவங்கி ரோடு அமைக்கப்படும். அதன்பின் வைகையின் தென்பகுதியில் நெரிசல் குறையும். தற்போது தேனி, விருதுநகர், தென்காசி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ரிங்ரோட்டில் சமயநல்லுார் சென்று பின்பு பரவை மார்க்கெட் வருகின்றன. அவை துவரிமான் பகுதியில் இருந்து நேரடியாக மார்க்கெட் வந்துவிடும். இதனால் வைகை வடகரை, தென்கரை இருபுறமும் போக்குவரத்து சிக்கல் தீரும் என்றனர்.
மார்க்கெட் ரோட்டை சீரமைக்க வேண்டும்
பரவை வியாபாரிகள் சங்க உறுப்பினர் நடராஜன் கூறியதாவது: பரவையில் 15 ஏக்கரில் உள்ள மார்க்கெட்டில் 600 கடைகள் உள்ளன. மொத்த வியாபாரம் என்பதால் தென்மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து பிற மார்க்கெட்களுக்கும் காய்கறி வாங்க வருகின்றனர். இதனால் தினமும் ஆயிரகணக்கான வாகனங்கள் வருகின்றன. அதிகாலையில் இவற்றால் நெரிசல் ஏற்படுகிறது. தற்போது திண்டுக்கல் ரோட்டில் இருந்து பரவை மார்க்கெட்டுக்கு 60 அடி ரோடு உள்ளது. பரவை மார்க்கெட்டில் இருந்து வைகை வடகரையில் அமையும் புதிய ரோட்டை இணைக்கும் வகையில் 40 அடி ரோடும் உள்ளது. இந்த ரோடுகளை ஒரேபோல 60 அடியாக அகலப்படுத்தி வைகை வடகரை ரோடுவரை சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பரவைக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நெரிசல் வெகுவாக குறையும். இதற்காக சமீபத்தில் மதுரை வந்த முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.