நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், தலா, 25 லட்சம் வீதம், 1.25 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து கிராமங்களில் அமைக்கப்பட்ட, 'மரகத பூஞ்சோலை'யை முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சில் திறந்து வைத்தார்.கிராம அளவில், ஒரு ஹெக்டேர் பரப்பளவில், வனம் சார்ந்த பலன்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் சிறுவனமே, 'மரகத பூஞ்சோலை' எனப்படும். இந்த திட்டத்தில், 100 கிராமங்களில், 'மரகத பூஞ்சோலைகள்' அமைக்கப்படும். இந்த திட்டமானது, 25 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, தமிழக வனத்துறை, ஒரு கிராமத்திற்கு, 25 லட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்துள்ளது. தொழில் வளம் பெருக பெருக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. இருந்தும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்க மரம், செடி, கொடிகளை வளர்க்கும் சோலை காடுகளை ஏற்படுத்த வேண்டியதும் காலத்தின் அவசியமாக உள்ளது.இதை நோக்கமாக கொண்டே, தமிழக அரசு, அமெரிக்கா நிதியுதவி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள, 17,000 கிராமங்களில், 'மரகத பூஞ்சோலை' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 100 கிராமங்களில், 'மரகத பூங்சோலை' அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வனச்சரகத்துக்குட்பட்டு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஒரு ஹெக்டேர் (2.47 ஏக்கர்) நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கனி வகைகள் கொண்ட மரங்கள், நிழல் தரும் மரங்கள், மலர் தரும் செடிகள் ஆகியவற்றை நட்டு வளர்த்து, வனத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூஞ்சோலைக்குள் நடைப்பயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.அதன்படி, நாமக்கல் வனக்கோட்டத்தில், தலா, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், நாமக்கல் - மோகனுார் சாலை வகுரம்பட்டி, கொல்லிமலை அரியூர்நாடு, ராசிபுரம் தாலுகா, பட்டணம், குருக்கபுரம், காமராஜர் நகர் என, ஐந்து கிராமங்களில், 'மரகத பூஞ்சோலை' அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சில், நேற்று தொடங்கி வைத்தார். நாமக்கல் - மோகனுார் சாலை, ரேஞ்சர் அலுவலகம் அருகில், 'மரகத பூஞ்சோலை' அமைக்கப்பட்டுள்ளது. இவை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, நேற்று திறந்து வைக்கப்பட்டது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் கலாநிதி, வனத்துறை அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர், மரகத பூஞ்சோலையை பார்வையிட்டனர்.