| ADDED : ஆக 04, 2024 10:07 PM
பள்ளிப்பாளையம்:நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 42; கணபதிபாளையம் பகுதியில் கிடங்கு அமைத்து, கழிவு பனியன் துணிகளை சேகரித்து, மறு சுழற்சி செய்து நுால் தயாரிக்கும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில் இவரது கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். கிடங்கு முழுதும் தீ பரவியதால், 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பொக்லைனில் கிடங்கின் ஒரு பகுதி சுவரை இடித்து வீரர்கள் உள்ளே சென்றனர். லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, 14 மணி நேர போராட்டத்திற்கு பின், நேற்று மாலை, 5:00 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பனியன் கழிவு முற்றிலும் சாம்பலாகின. சேத மதிப்பு, 2 கோடி ரூபாய் என, கூறப்படுகிறது. வருவாய் துறை அதிகாரிகள், பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.