உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாற்றுத்திறனாளிக்கான வீடு அமைச்சர், எம்.பி., வழங்கினர்

மாற்றுத்திறனாளிக்கான வீடு அமைச்சர், எம்.பி., வழங்கினர்

நாமக்கல், நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கான வீட்டை, அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், ஆகியோர் வழங்கினர். நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, தோக்கம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். மாற்றுத்திறனாளியான இவரால் நடக்க முடியாத சூழலிலும், தனது, 80 வயது தந்தையை பராமரிப்பதுடன் சிறிய குடிசையில் வசித்து வந்தார். இவருக்கு அரசு மானிய திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், கலெக்டர் உமாவிடம் கோரிக்கை விடுத்தனர். நாமக்கல் தாசில்தார் மூலம் அதன் உண்மை தன்மையை அறிய கலெக்டர் உத்தரவிட்டார்.செல்வராஜ் நிலையை அறிந்து, உடனடியாக அவருக்கு கையால் இயக்கக்கூடிய மூன்று சக்கர சைக்கிள், அவர்களது வீட்டுமனை பட்டா நகல், மாத உதவித்தொகையாக, 2,000 ரூபாயுடன் உடன் கூடுதலாக, 1,000 ரூபாய் உதவித்தொகை என மொத்தம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியதுடன் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதற்கான நிவாரணங்களை எம்.பி., ராஜேஸ்குமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கினார். மேலும், தனது சொந்த நிதியில், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கினார். மேலும், சமூக பொறுப்பு நிதியிலிருந்து, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நேற்று வீட்டிற்கான சாவியை செல்வராஜீடம் அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில் கலெக்டர் உமா வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சாவியை பெற்றுக்கொண்ட செல்வராஜ், தமிழக முதல்வருக்கும், அமைச்சர், எம்.பி., ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ