குமாரபாளையம்: வீடுதோறும் பாட்டுப்பாடி மக்களிடம் தானம் பெற்ற அரிசியை, கஞ்சி காய்ச்சி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கினால், மழை பெய்யும் என்ற ஐதீகத்தை, அப் பகுதி பெண்கள் பின்பற்றி வருகின்றனர்.கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நிலத்தடி நீர் குறைந்து, அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை இருந்து வருகிறது. காவிரியில் போதிய நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதுபோன்ற நிலையில், மழை பெய்ய வேண்டி, பொதுமக்களிடம் அரிசி தானம் பெற்று, அதனை கஞ்சி காய்ச்சி கோவில்களில் சுவாமிக்கு படைத்து மக்களுக்கு வழங்கினால், மழை பெய்யும் என்ற ஐதீகத்தை, பெண்கள் பின்பற்றி வருகின்றனர். அதன்படி, குமாரபாளையம் அருகே, குப்பாண்டபாளையம் பகுதி பெண்கள் சிலர், ஒவ்வொரு வீட்டின் முன் கூடையை வைத்துக்கொண்டு பாட்டுப்பாடி, அரிசியை தானமாக பெறுகின்றனர். தானமாக பெற்ற அரிசியை, அப்பகுதியில் உள்ள கோட்டைமேடு காளியம்மன் கோவில், தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கஞ்சி காய்ச்சி சுவாமிக்கு படைக்கின்றனர்.தொடர்ந்து, அந்த கஞ்சியை பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். அதனை, 'மழைக்கஞ்சி' என, அழைக்கின்றனர். இதனால், மழை வளம் பெருகும் என்பது ஐதீகம்.பாட்டுப்பாடி அரிசி தானம் கேட்டு வரும் பெண்களிடம், அப்பகுதி மக்கள் இல்லை என்று கூறாமல், தாராளமாக அரிசியை தானமாக செய்கின்றனர்.