நாமக்கல்: 'குளக்கரை திடல் பூட்டப்பட்டதால், வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.நாமக்கல் நகரின் மையத்தில் குளக்கரை திடல் உள்ளது. இங்கு, அரசு நிகழ்ச்சிகள், கட்சி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திருவிழாவின் போது, இரண்டு மாதம் தேர்க்கடைகள் அமைத்து, வியாபாரம் மேற்கொள்வது வழக்கம்.நாமக்கல் மலைக்கோட்டைக்கு உட்பட்ட குளக்கரை திடல், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு உட்பட்டது. இங்கு, நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு, அதன் அனுமதி பெறவேண்டும். மேலும், நாமக்கல் கடைவீதியில் உள்ள ஜவுளி, நகைக்கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு, கார், டூவீலரில் வரும் வாடிக்கையாளர்கள், இந்த குளக்கரை திடலில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.ஆண்டுதோறும், பங்குனியில் நடக்கும் நரசிம்மர், ஆஞ்சநேயர், அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவின் போது, இந்த குளக்கரை திடலில், இரண்டு மாதம் தேர்க்கடை அமைத்து, வியாபாரம் மேற்கொள்வதும் வழக்கம். இந்தாண்டு, தேர்த்திருவிழா முடிந்தபின், தேர்க்கடை அமைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின், கடந்த சில நாட்களுக்கு முன் தேர்க்கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, கடைவீதி வரும் வாடிக்கையாளர்கள், திடலில் தங்களது கார், டூவீலர் போன்ற வாகனங்களை நிறுத்தி செல்லலாம் என நினைத்திருந்தனர்.ஆனால், குளக்கரை திடலின் கேட்டுக்கு பூட்டு போடப்பட்டது. அதனால், ஜவுளி, நகைக்கடை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர். பிரதான சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால், அப்பகுதியில் போக்குவத்து நெரிசல் ஏற்படுகிறது.ஏற்கனவே, வாகன பெருக்கம் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் விழிபிதுங்கும் நிலையில், தற்போது, வாகனங்களை சாலையை ஆக்கிரமிப்பதால், கடும் நெரிசல் ஏற்பட்டு, ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதனால், குளக்கரை திடலை திறந்து, வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.