| ADDED : ஜூன் 14, 2024 01:40 AM
நாமக்கல், ரேஷன் கடைகளுக்கு பில் மற்றும் கண்விழி ஸ்கேனருடன் புது மிஷின் வழங்கும் பணி தொடங்கியது.ரேஷனில் பொருட்களை வாங்குபவர்களுக்கு தொடக்கத்தில் பில் எழுதி வழங்கப்பட்டு வந்தது. அதன் பின், போலி அட்டைகளை கண்டுபிடிக்க ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் எண்ணும் இணைக்கும் பணி நடந்தது. தொடர்ந்து, ரேஷன் கடைகளுக்கு எலக்ட்ரானிக் மிஷின் வழங்கப்பட்டது. '2ஜி' சிம் பொருத்தப்பட்ட இந்த மிஷினில் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து, குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வினியோகிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த முறையில் வயதானவர்கள் பலரின் கைரேகை மிஷினில் பதிவாகவில்லை.இதனால், பயோமெட்ரிக்கை உள்ளடக்கி, 4ஜி சிம் மற்றும் பில் எடுக்கும் வசதியும் புதிய தலைமுறை ரேஷன் கடை மிஷின்கள் வழங்க அரசு திட்டமிட்டது. இதில், கண்விழியை ஸ்கேன் செய்யும் ஐரிஸ் மிஷினையும் இணைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த மிஷின்களை சில மாதங்களுக்கு முன் ஒரு சில கடைகளுக்கு மட்டும் வழங்கி முன்னோட்டம் பார்க்கப்பட்டது. இவை அனைத்தும் எவ்வித பிரச்னையும் இன்றி வேலை செய்ததால், முதலாவதாக தமிழகத்தில் உள்ள அனைத்து முழு நேர ரேஷன் கடைகளிலும், 4ஜி மிஷின்கள் வழங்கும் பணி தொடங்கியது. நேற்று முன்தினம் பழைய மிஷின்களை பெற்றுக்கொண்ட கூட்டுறவு நிறுவனங்கள் புதிய, 4ஜி மிஷின்களை நேற்று வழங்கின. 50 சதவீதத்திற்கு மேல், கண்விழியை ஸ்கேன் செய்யும் ஐரிஸ் மிஷினும் வழங்கப்பட்டுள்ளன. மற்ற கடைகளுக்கு விரைவில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 715 முழுநேர கடைகளும், 241 பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன. இதில் முதல் கட்டமாக, 75 கடைகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு, 4ஜி மிஷின்கள் வழங்கப்பட்டன. நேற்று மீதமுள்ள, 640 ரேஷன் கடைகளுக்கு, 4ஜி மிஷின்கள் வழங்கப்பட்டன. ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு புதிய மிஷினை பயன்படுத்துவது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர்.