| ADDED : ஜூன் 14, 2024 01:11 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த மொளசி இறையமங்கலத்தை சேர்ந்தவர் கனகராஜ், 32; விவசாயி. இவரது மனைவி லோகவர்த்தினி, 28. இவர்களது ஒன்றரை வயது மகள் ரக்ஷன்யா.இந்நிலையில், நேற்று காலை, கனகராஜ் தோட்டத்து வேலைக்கு டிராக்டரை எடுத்து ஓட்டி சென்றார். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த ரக்ஷன்யா தலை மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த ரக்ஷன்யாவை மீட்டு, காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஒரு வளைவில் காரை திருப்பிய போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், குழந்தை ரக்ஷன்யா காரில் சிக்கி கொண்டார்.பின், குழந்தையை மீட்டு, திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரக்ஷன்யா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.