| ADDED : மே 21, 2024 11:26 AM
ப.வேலுார்: ப.வேலுார், தெற்கு நல்லியம்பாளையம், 4வது வார்டில் ரேஷன் கடை எண், 6 இயங்கி வருகிறது. இந்த கடை அங்குள்ள வீட்டின் ஒரு பகுதியில், வாடகை கட்டடத்தில், கடந்த, 8 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. கட்டடம் பழுதாகி, இட நெருக்கடியாக இருப்பதால், ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் மழையிலேயே நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, ப.வேலுார், 4வது வார்டு கவுன்சிலர் ராமசாமி கூறியதாவது: தெற்கு நல்லியாம்பாளையத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, ப.வேலுார் டவுன் பஞ.,க்கு சொந்தமான காலியிடம் உள்ளது. அங்கு புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். தமிழக அரசு விரைவில் புதிய கட்டடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.