மல்லசமுத்திரம், திருவேங்கடபுரத்தில் உள்ள எலும்பு குடோனை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் குடோனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் வடிவேல், 47. இவர், மல்லசமுத்திரம் அருகே, திருவேங்கடபுரத்தில் ராமசாமி என்பவரது விவசாய தோட்டத்தில், கடந்த, 13 ஆண்டுகளாக மாட்டிறைச்சி கடைகளில் எலும்பை சேகரித்து, குடோனில் வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அங்கிருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட நாய்கள் மோப்பம் பிடித்தவாறு, அருகிலுள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து, மூன்று செம்மறி ஆடுகளை கடித்து குதறியது. இதனால், நேற்று காலை, 9:00 மணியளவில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு குடோனை அகற்றக்கோரி, முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த அப்பகுதி, வி.ஏ.ஓ., சோபனா, மல்லசமுத்திரம் எஸ்.ஐ., ரஞ்சித்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடோனை அகற்றக்கோரி உத்தரவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.