உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீசாருக்கு தண்ணீர் காட்டிய வருவாய்த்துறை: காவிரியாற்றில் நடந்த மர்மம் என்ன?

போலீசாருக்கு தண்ணீர் காட்டிய வருவாய்த்துறை: காவிரியாற்றில் நடந்த மர்மம் என்ன?

ப.வேலுார், ப.வேலுார் காவிரியாற்றில் மணல் திருடிய பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், ஸ்டேஷனுக்கு கொண்டு வருவதாக கூறிவிட்டு மாயமானதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ப.வேலுார் அருகே, பிலிக்கல்பாளையம் காவிரியாற்றில், நேற்று காலை, 9:00 மணிக்கு பொக்லைன் இயந்திரம், டிராக்டர் மூலம் மணல் திருட்டு நடப்பதாக அப்பகுதி மக்கள், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற பொன்மலர்பாளையம் வி.ஏ.ஓ., தமிழ்ச்செல்வன், ஆர்.ஐ., பூங்கொடி ஆகியோர், காவிரியாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த பொக்லைன் இயந்திரம், ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, வருவாய்த்துறையினர், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.காவிரியாற்றில் மணல் திருடிய இடம், ப.வேலுார் எல்லைக்குட்பட்டதால் ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லும்படி, ஜேடர்பாளையம் போலீசார் அறிவுறுத்தினர். இதுகுறித்து, ப.வேலுார் போலீசாருக்கு, ஜேடர்பாளையம் போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால், வருவாய்த்துறையினர், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கடைசிவரை கொண்டு செல்லாததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து செய்தி சேகரிக்க, வி.ஏ.ஓ., தமிழ்ச்செல்வன், ஆர்.ஐ., பூங்கொடிக்கு பலமுறை போன் செய்தும் போனை எடுக்கவில்லை. இடையில் நடந்தது என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.பரமத்தி வேலுார் தாசில்தார் முத்துக்குமாரிடம் கேட்டபோது, ''பொன்மலர்பாளையம் காவிரி ஆற்றில் பொக்லைன் இயந்திரம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, டிராக்டர் வண்டியில் மணல் இல்லை. வண்டியில் மணல் இல்லை என்றால், நாளை வழக்கு நிற்காது. ஆர்.ஐ., பூங்கொடி தவறுதலாக வண்டியை பறிமுதல் செய்து விட்டார். அதனால் விடுவித்து விட்டோம்,'' என்றார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:காவிரியாற்றில், நேற்று அதிகாலை முதல், இரண்டு டிராக்டர், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மணல் திருட்டு ஜோராக நடந்து வந்தது. இதுகுறித்து, வி.ஏ.ஓ., தமிழ்ச்செல்வன், ஆர்.ஐ., பூங்கொடி ஆகியோரிடம் தகவல் தெரிவித்தோம். வருவாய்த்துறை அதிகாரிகள் வருவதையறிந்து, ஒரு டிராக்டர் மணலுடன் தப்பிச் சென்றது. ஒரு ஜே.சி.பி., ஒரு டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அதன்பின் என்ன நடந்தது என, தெரியவில்லை. இதேபோல், பாலப்பட்டி அருகே குமாரபாளையத்தில் தினந்தோறும் இரவு நேரத்தில் மணல் திருட்டு அதிகளவில் நடக்கிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை