உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் ஓட்டிய பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்

டூவீலர் ஓட்டிய பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்

ராசிபுரம், ராசிபுரம் பகுதியில் டூவீலர் ஓட்டிய பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், 18 வயது நிறைவடைந்த பள்ளி மாணவர்கள் டூவீலரில், 3 அல்லது 4 பேர் செல்வது வாடிக்கையாக உள்ளது. சிறுவர்கள் டூவீலர் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிப்பதுடன், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என, வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டினர்.இந்நிலையில், பரமத்தி வேலுார் பகுதியில், 14 வயது சிறுவர்கள் இருவர் ஆம்னி ஓட்டிப்பழகும்போது விபத்தில் இறந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுதும் வட்டார போக்குவரத்து துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். நேற்று மாலை, ராசிபுரம் பகுதியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி மாணவர்கள் உள்பட, 3 பேர் ஒரே வண்டியில் வந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, சிறுவர்கள் என தெரிந்தது. இதையடுத்து வண்டியை பறிமுதல் செய்து ராசிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். மாணவர்களின் பெற்றோருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இதுபோன்று நடந்தால், பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ