மோகனுார்: மோகனுார், மணப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட சென்னாக்கல்புதுாரில் குன்றின் மீது, சபரி சித்தநாதன் ஐயப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. ஐயப்ப சீசன் துவங்கியதும், மாலை அணியும் பக்தர்கள், இக்கோவிலில் தங்கி சுவாமியை வழிபட்டு, 48 நாட்கள் விரதமிருந்து, ஐயப்பன் கோவிலுக்கு சென்று விரதத்தை முடிப்பர்.இந்நிலையில், கோவிலில் கடந்த, 28 முதல், நேற்று வரை, மற்றும் சில நாட்கள், காலை, 6:18 முதல், 6:24 வரை, மூலவர் ஐயப்ப சுவாமி மீது, சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. அவற்றை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் பார்த்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர். அதேபோல், நேற்று காலையும் சூரிய ஒளி, ஐயப்பன் சுவாமி மீது விழுந்தது. அப்போது, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.