| ADDED : ஜன 07, 2024 02:45 AM
நாமக்கல்:நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் கட்டளைதாரர் கிடைக்காததால் 1.08 லட்சம் வடைமாலை சாத்துப்படி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தற்போது கட்டளைதாரர் கிடைத்துள்ளதால் இன்று முதல் வடைமாலை தயாரிப்பு பணி துவங்குகிறது.நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லால் உருவான சாலகிராம மலையில் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஜன., 11ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று சுவாமிக்கு 1.08 லட்சம் வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடப்பது வழக்கம்.இந்தாண்டு வடைமாலை சாத்துப்படி செய்ய கட்டளைதாரர் யாரும் முன்வரவில்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. மேலும் குறைந்தளவே வடைமாலை தயாரித்து சுவாமிக்கு சாத்துப்படி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2023 டிச., 29ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தற்போது கட்டளைதாரர் பங்களிப்புடன் 1.08 லட்சம் வடைமாலை சாத்துப்படி நடக்கிறது.இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறியதாவது:ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி கட்டளைதாரர்கள் பங்களிப்புடன், ஜன.,11ல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1.08 லட்சம் வடைமாலை சாத்துப்படி நடக்கிறது. திருச்சியை சேர்ந்த ரமேஷ் குழுவினர் உரிய பாதுகாப்புடன் துாய்மையுடன் வடை தயாரித்து, சுவாமிக்கு சாத்துப்படி செய்யப்படும். வடைமாலை தயாரிக்கும் பணி, நாளை (இன்று) துவங்குகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.