நாமக்கல்: 'மாவட்டத்தில், வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட, 12 லட்சத்து, 28,190 எஸ்.ஐ.ஆர்., படிவங்கள், இதுவரை திரும்ப பெறப்பட்டுள்ளது' என, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, தமிழகத்தில், 21 ஆண்டுகளுக்கு பின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.,) நடக்கிறது. மாவட்டத்தில், 1,629 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மொபைல் எண், உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு, எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் வினியோகிக்கும் பணி, கடந்த நவ., 4ல் தொடங்கியது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 14 லட்சத்து, 66,660 வாக்காளர்களில், 14 லட்சத்து, 59,718 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து, 12 லட்சத்து, 28,190 பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் பெறப்பட்டு, பி.எல்.ஓ., செயலி மூலம் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்ள, வாக்காளர் பதிவு அலுவலர்கள், சப் கலெக்டர்கள், மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என, 3,500 பேர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர்., படிவங்களை, வாக்காளர்கள் திரும்ப ஒப்படைக்க, வரும், 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இறுதிநாள் வரை காத்திருக்காமல், பூர்த்தி செய்யப்பட்ட தங்களது எஸ்.ஐ.ஆர்., படிவங்களை, உடனடியாக வழங்கி தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளர்.