நாமக்கல் : ''வரும், 4ல் நாமக்கல் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாதுகாப்பு பணியில், 1,424 போலீசார் ஈடுபட உள்ளனர்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா கூறினார்.இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கூறியதாவது:நாமக்கல் லோக்சபா தொகுதியை பொறுத்தவரை, சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 11 லட்சத்து, 36,000 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. மேலும், 11,373 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. காலை, 8:00 மணிக்கு, தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு, தலா ஒரு மையம், தபால் ஓட்டுகள் ஒரு மையம் என, மொத்தம், 7 மையங்களில் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட பின், காலை, 8:30 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி கலெக்டர்கள், முகவர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுகள் எண்ணப்படும். சங்ககிரி தொகுதிக்கு, 23 சுற்றுகள், மற்ற தொகுதிகளுக்கு, 19 சுற்றுகள் எண்ணப்படும். இதில், 14 மேஜைகள் போடப்பட்டு, ஓட்டு எண்ணும் உதவியாளர், மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணிப்பர்.தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பார்வையாளர்கள், சண்டிகர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வருகை தர உள்ளனர். ஓட்டு எண்ணும், 7 அறைகளில், மொத்தம், 347 பேர் நேரடியாக பணியாற்றுகின்றனர். ஓட்டு எண்ணும் மையம் மற்றும் மாவட்டத்தின் பிறப்பகுதிகள் என, இரண்டு கட்டங்களாக பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில், 1,424 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணும் மையத்தில், 600 போலீசார் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.