சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற, 3 கடைகளுக்கு, 'சீல்' வைத்து, 55,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம் முழுதும் கடந்த, 4 மாதங்களாக உணவு பாதுகாப்பு துறை, வருவாய்த்துறை, போலீசார் இணைந்து, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சேந்தமங்கலம் டவுன் பஞ்., பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் அதிகளவில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருணுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சேந்தமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஜங்கலாபுரம் கிழக்கு தெருவில் உள்ள கீதா, 42, சாலையூரை சேர்ந்த சேகர், 50, பொட்டனத்தை சேர்ந்த சிங்காரவேல், 52, ஆகியோரது பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பெட்டி கடைகளுக்கு, 'சீல்' வைத்த அதிகாரிகள், 55,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருண் கூறுகையில், ''கடந்த, 4 மாதமாக மாவட்டம் முழுதும் கூட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 179 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1,632 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.