எருமப்பட்டி: நாமக்கல் அருகே, ரெட்டிப்பட்டி பஞ்., கூலிப்பட்டி கந்தமலையில் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. விசேஷ நாட்களில் இக்கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், செயல் அலுவலராக சுந்தரராசு உள்ளார். இந்நிலையில், நேற்று கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், ஒரு லட்சத்து, 8,720 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், உண்டியலில் பக்தர் ஒருவர், கடவுள் முருகனுக்கு எழுதிய கடிதம் ஒன்று இருந்தது.அதில் கூறப்பட்டிருந்ததாவது:முருகா, நான் மனமுருகி கேட்கிறேன். உனக்கு கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், அறநிலையத்துறையினர் எந்த ஏற்பாடும் செய்யாமல் உள்ளனர். 3 ஆண்டாக கோவிலுக்கு காவலர், துாய்மை பணியாளர்களை நியமிக்காமல் உள்ளனர். அர்ச்சகர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை. குடிநீர், கழிப்பிடம், மின் விளக்கு வசதியில்லை. தேர் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. மேலும், உண்டியல் பணத்தை கோவில் திருப்பணிக்கு செலவு செய்யவில்லை. இந்தமுறையாவது உண்டியல் பணத்தை திருப்பணிக்கு செலவு செய்ய வேண்டும். கோவிலுக்கு நன்கொடை கொடுத்தால் ரசீது வழங்குவதில்லை. இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு எப்படி முருகா மலையில் இருக்கிறாய். இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.இதுகுறித்து, செயல் அலுவலர் சுந்தரராசு கூறியதாவது: இக்கோவிலில், ஓராண்டுக்கு உண்டியல் காணிக்கையாக, 3 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இந்த பணத்தை கோவில் பராமரிப்பு, மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். கோவில் திருப்பணி செய்ய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. நன்கொடையாளர்கள் வந்தவுடன் அப்பணி தொடங்கும். பக்தர்கள் நன்கொடை வழங்கும் பணத்திற்கு உரிய ரசீது கொடுக்கப்பட்டு வருகிறது. இதை, யார் வேண்டுமானாலும் அலுவலகத்திற்கு வந்து பார்த்துக்கொள்ளலாம். கோவில் நிர்வாகம் எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல், நேர்மையுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.