பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் தொழில் உரிம கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகர்மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.பள்ளிப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம், மன்ற அரங்கில், நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், தொழில் உரிம கட்டண உயர்வுக்கு, மன்றத்தின் அனுமதிக்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதுகுறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில் கூறியதாவது:கொரோனா காலத்தில் இருந்தே தொழில் நடத்த முடியாமல், தற்போது தான் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். ஏற்கனவே நகராட்சி சார்பில், சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது, தொழில் உரிம கட்டணம் பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.பின், விவாத்தில் கலந்து கொண்டனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:சம்பூரணம், அ.தி.மு.க.,: என் வார்டில் தனி நபர் தலையீடு அதிகமுள்ளது. அவரை கேட்டு தான் வார்டுக்குள் வர வேண்டும் என, அதிகாரியை மிரட்டுகிறார். நான் ஒரு கவுன்சிலர், மக்கள் பிரதிநிதி, என்னை தான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு சேர்மன் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில், அ.தி.மு.க.,; காவிரி ஆறு முழுதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகுமார், தி.மு.க.,; குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட சாலை, ஐந்து மாதங்களாக சீரமைக்கவில்லை. இதுவரை, மூன்று பேர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். பணி தொய்வால் ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.சுசிலா, அ.தி.மு.க.,: கவுன்சிலர் என்ற முறையில் எந்த பணியை சொன்னாலும் அதிகாரிகளும், பணியாளர்களும் கேட்பதில்லை.செல்வராஜ், நகராட்சி தலைவர்: யூகத்தின் அடிப்படையில் பேசினால் பதில் சொல்ல முடியாது. ஆதாரத்துடன் பேசுங்கள், வார்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுங்கள். தேவையில்லாதவற்றை மன்றத்தில் பேச வேண்டாம்.ஆகாயத்தாமரை அகற்ற பொதுப்பணித்துறைக்கு நகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்படும். குடிநீர் பணி தொய்வு நிலையில் உள்ளதால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்படும். நகராட்சி பகுதியில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்கப்படும்.பாலமுருகன், நகராட்சி துணைத்தலைவர்: குடிநீர் பணிகள் நடக்கிறதா, இல்லையா என, நகராட்சி பொறியாளர் கண்காணிக்க வேண்டும். ஆனால், பொறியாளர் வேலையில் கவனம் செலுத்தாமல் உள்ளார். இல்லையெனில் வேறு நகராட்சிக்கு மாறுதல் பெற்று சென்று விடுங்கள். மக்கள் கேட்கும் கேள்விக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.