| ADDED : செப் 13, 2011 02:01 AM
மேட்டூர்: பப்பாளி பழங்களை ருசித்து விட்டு, வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற,
14 காட்டு பன்றிகள் கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. இதில், 11
பன்றிகளை வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டு வனத்தில்
விட்டனர். மேட்டூர் தாலுகா, கொளத்தூர், ஏழரைமத்திக்காடு அருகே
புழுதிமணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது நிலத்தில், பப்பாளி
சாகுபடி செய்துள்ளார். தற்போது, மரங்களில் பப்பாளி பழங்கள் பழுத்து
தொங்குகின்றன. நேற்று அதிகாலை புழுதிமணக்காடு வனப்பகுதியில் இருந்து, 14
காட்டு பன்றிகள் ஆறுமுகம் தோட்டத்தில் புகுந்து, பப்பாளி பழங்களை
ருசித்துள்ளது. அப்போது, விவசாயிகள் வருவதை அறிந்த காட்டு பன்றிகள்,
வனப்பகுதிக்குள் தப்பியோட முயன்றன. ஆனால், அருகில் தடுப்பு சுவர் இல்லாத
கிணற்றில் தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்தன. தகவல் அறிந்த கொளத்தூர்,
பாலமலை வனவர்கள் குப்புசாமி, சிவகுமார், குரும்பனூர் வடக்கு வனகாப்பாளர்
கிருஷ்ணன் மற்றும் மேட்டூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று,
மூன்று குட்டிகள் உள்பட 11 பன்றிகளை உயிருடன் மீட்டு வனப்பகுதியில்
விட்டனர். நீரில் மூழ்கி, மூன்று காட்டுபன்றிகள் இறந்து விட்டன.