உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 82 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை:மாவட்ட கலெக்டர் தகவல்

82 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை:மாவட்ட கலெக்டர் தகவல்

நாமக்கல்: ''நாமக்கல் மாவட்டத்தில், 82 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பேசினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள், மகளிர் திட்டம் மூலம் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து, தீர்மானப் பதிவேடு, வரவு செலவு பதிவேடு பராமரித்து ஆறு மாத காலம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பிறகு, குழுக்களிடையே தரம் பிரிக்கப்பட்டு, அதனடிப்படையில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு, 15 ஆயிரம் வீதம் மானியமும், 50 ஆயிரம் ரூபாய் வங்கிக் கடனும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் குழுக்களுக்கு, 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனும், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மானியமும் அரசு வழங்கி வருகிறது. இதுவரை, 82 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். வாரிய அட்டை பெறறுள்ள அனைவருக்கும், வீட்டுமனைப் பட்டா, ரேஷன் கார்டு, தொகுப்பு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 20 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு, நகர்புறத்தில் வீடுகள் கட்ட கடன் வசதியும், பஞ்சாயத்து பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், தையல் மிஷின், சமையல் பயிற்சி, அழகு நிலையம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.மகளிர் திட்ட அலுவலர் அண்ணாமலை, மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தா, தாய்விழுதுகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தேவி, திருநங்கைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை