| ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
சேந்தமங்கலம்: எம்.ஜி.ஆர்., சிலை புதுப்பிப்பதற்காக மறைப்பு கட்டியிருந்த தென்னங்கீற்றுக்கு தீ வைத்துவிட்டு தலைமறைவான வாலிபரை, சேந்தமங்கலம் போலீஸார் தேடி வருகின்றனர். சேந்தமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. அதை புதுப்பிக்கும் பணி, கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக சிலை சுற்றியும் தென்னங்கீற்றால் ஆன மறைப்பு கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு பச்சுடையாம்பட்டியை சேர்ந்த உதயகுமார் (30) என்பவர், எம்.ஜி.ஆர்., சிலையை சுற்றி மறைப்பு கட்டிருந்த தென்னங்கீற்றுக்கு தீ வைத்து விட்டு ஓடிவிட்டார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருந்தும் தென்னங்கீற்று மறைப்பு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து சேந்தமங்கலம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, தலைமறைவான உதயகுமாரை தேடி வருகின்றனர்.