எருமப்பட்டி : எருமப்பட்டி அருகே, கஸ்துாரிப்பட்டியில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் திருவிழா நடந்தது.எருமப்பட்டி அருகே, கஸ்துாரிப்பட்டியில் பாலாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், ஒரு தரப்பினர் தனியாக பகவதியம்மன் கோவில் கட்டினர். இக்கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கடந்த இரண்டு வாரத்திற்கு முன், சேந்தமங்கலம் தாசில்தார் சத்திவேல் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.உடன்பாடு ஏற்படாததால், ஒரு தரப்பினர் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். அந்த கோவில், திருவிழா நடத்த அனுமதி கேட்ட சமூகத்தினருக்கு சொந்தமான கோவில் என்பதால், திருவிழா நடத்திக்கொள்ள போலீசார் அனுமதி வழங்கினர். இந்நிலையில், நேற்று, கஸ்துாரிப்பட்டியில் பகவதியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவையொட்டி, காலை சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, நாமக்கல், ஆர்.டி.ஓ., பார்த்திபன் தலைமையில், தாசில்தார் சத்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டிருந்தனர்.அதை தொடர்ந்து, பகவதியம்மன் சுவாமி பல்லக்கில் வைக்கப்பட்டு, கஸ்துாரிப்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில், ஏராளமான பெண்கள் தேங்காய் பழம் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், சங்கரபாண்டியன் உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், கஸ்துாரிப்பட்டி கிராமம் பரபரப்பாக காணப்பட்டது.