நாமக்கல் : 'கொல்லிமலைக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு குடிநீர் பிரச்னையை தீர்க்க, 10 கோடி ரூபாய் நிதி உதவி கேட்டு அரசின் கவனத்திற்கு அனுப்பி உள்ளோம்' என, நாமக்கல் கலெக்டர் உமா கூறினார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திங்கள்தோறும், உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்.,கள் ஆகியோருடன் சேர்ந்து, குடிநீர் பிரச்னைக்கு எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதில், நல்ல விசயம் என்னவென்றால், ஊரக பகுதியை பொறுத்தவரை, 322 கிராம பஞ்.,களில், கொல்லிமலையை தவிர மற்ற அனைத்தும் கூட்டு குடிநீர் திட்டத்தில் தான் உள்ளது.நகராட்சிகளை பொறுத்தவரை, ராசிபுரத்தை தவிர மற்ற நான்கு நகராட்சிகள், தங்களது சொந்த நிதி மூலம், காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக பம்பிங் செய்யும் வகையில் வைத்துள்ளனர். அதேபோல், டவுன் பஞ்.,கள் அனைத்தும் கூட்டு குடிநீர் திட்டத்தில் தான் உள்ளன. தற்போது, காவிரியில், 1,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொதுமக்களுக்கும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.குடிநீரை பொறுத்தவரை, கொல்லிமலைக்கு மட்டுமே உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.அதற்கு, லாரிகள் மூலம் வினியோகம் செய்யவும் அனுமதி வழங்கி உள்ளோம். மேலும், 10 கோடி ரூபாய் மதிப்பில் இருக்கின்ற, 'ஓன் சோர்சை' பயன்படுத்தி, பைப் லைன் கசிவு மாற்றுவதற்கு, அதற்கான நிதி உதவி கேட்டு, அரசின் கவனத்திற்கு அனுப்பி உள்ளோம்.மேலும், அந்தந்த ஊரக பகுதியில் இருக்கின்ற பிளாக் பஞ்., நிதி, கிராம பஞ்., நிதி, 15வது நிதிக்குழு மானியம் என, எந்த நிதி இருக்கிறதோ அவற்றை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில், பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்னை வராமல் இருப்பதற்கு முதல்கட்ட நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கிறோம்.நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, பாசனத்திற்கு நேரடியாக எடுக்கக் கூடிய நீரேற்று பாசன திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். குடிநீர் தான் நமக்கு தற்போது முக்கியம். நீரேற்று பாசன திட்ட மின் இணைப்பை துண்டித்து விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.