| ADDED : டிச 03, 2025 07:55 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், அங்குள்ள காட்டாறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்குள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள காரவள்ளி பெரிய ஆற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள பல்வேறு கிளை ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் பெரிய ஆற்றில் கலந்து, அங்கிருந்து சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திக்குளம் சின்ன ஏரிக்கு செல்கிறது. சின்னக்குளம் ஏரி முழுவதும் நிரம்பி வெளியேறும் உபரிநீர், சேந்தமங்கலம் அடுத்துள்ள காந்திபுரம், பொம்மசமுத்திரம் ஏரிக்கு வருகிறது. இதனால், பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. சேந்தமங்கலம் மற்றும் காந்திபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.