நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், 2024--25-ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், காரீப் பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, சிறிய வெங்காயம், தக்காளி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை பயிர்கள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாசிப்பயறு பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு தலா, 304.30- ரூபாய் வரும், 15ம் தேதிக்குள்ளும், நிலக்கடலை பயிருக்கு, 420.89- ரூபாய், ஆக.,16க்குள்ளும், சோளம் பயிருக்கு, 136.80- ரூபாய் ஆக., 16க்குள்ளும், மக்காச்சோளத்திற்கு, 638.25- ரூபாயை, செப்., 16க்குள்ளும், மற்றும் பருத்திக்கு, 499.80- ரூபாயை செப்., 16க்குள்ளும் செலுத்த வேண்டும்.சிறிய வெங்காயத்திற்கு, 1,230.06- ரூபாயை ஆக., 31க்குள்ளும், தக்காளிக்கு, 1,017.64- ரூபாயை ஆக., 31க்குள்ளும், மரவள்ளிக்கு, 619.48- ரூபாயை செப்., 16க்குள்ளும், மஞ்சளுக்கு, 3,215.94- ரூபாயை செப்., 16க்குள்ளும், வாழைக்கு, 1,857.44- ரூபாயை செப்., 16க்குள்ளும் செலுத்த வேண்டும். எனவே, விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ அல்லது தேசிய பயிர்காப்பீட்டு இணையதளத்தில் உள்ள 'விவசாயிகள் கார்னரில்' (www.pmfby.gov.in) நேரடியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனரையோ, தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அணுகலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.