உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலை வனப்பகுதியில் நடைபாதை தகவல் அளிக்காத வனக்காப்பாளர் சஸ்பெண்ட்

கொல்லிமலை வனப்பகுதியில் நடைபாதை தகவல் அளிக்காத வனக்காப்பாளர் சஸ்பெண்ட்

சேந்தமங்கலம்: கொல்லிமலை குண்டூநாடு பஞ்., பள்ளி காட்டுப்பட்டியில் இருந்து, திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள சுக்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் விளையும் பலா, அன்னாசி, மிளகு, காபி, வாழை உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்ல அங்குள்ள வனப்பகுதியில் உள்ள நடைபாதையை அகலப்படுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட வன அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். வனத்துறையினர் நடைபாதையில் உள்ள செடி, கொடிகளை மட்டும் அகற்றி பாதையை, 5 அடி அகலத்திற்கு மரங்களை சேதப்படுத்தாமல் நடைபாதை அமைக்க ஒப்புதல் அளித்தனர்.ஆனால், அப்பகுதி மக்கள், 10 அடி அகலத்திற்கு சாலையை அகலப்படுத்தி மரங்களை வெட்டியுள்ளனர். இது சம்பந்தமாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு புகார் வந்தது. அவரது உத்தரவுப்படி, பள்ளிக்காட்டுபட்டியை சேர்ந்த, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலா, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சுக்கலாம்பட்டியை சேர்ந்த, 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 40,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.இதுகுறித்து, மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும், வனப்பகுதியை பாதுகாக்காமல் கவனக்குறைவாக இருந்ததாலும், குண்டூர்நாடு வனக்காப்பாளர் குமாரை பணியிடை நீக்கம் செய்து, அப்பகுதியில் வனவராக பணியாற்றிய பிரியங்காவை ராசிபுரம் இடைப்பாடு காடுகள் பிரிவு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ