| ADDED : பிப் 16, 2024 11:44 AM
குளித்தலை: குளித்தலை அருகே, குப்பாச்சிப்பட்டியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி என்பதால், சாலையில் பேரிகார்டுகள் அமைக்க வேண்டும் என கூறி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., குப்பாச்சிபட்டி கிராமத்தில் மணப்பாறை - குளித்தலை நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலையில் பேரிகார்டு, வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குப்பாச்சிபட்டி பகுதியில், அடிக்கடி விபத்துகள் நடப்பதால், இந்த பகுதியில் பேரி கார்டுகள் வைக்க வேண்டுமென கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை இன்ஸ்பெக்டர் இளங்கோ, பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, கலெக்டரிடம் பேசி, விரைவில் பேரிகார்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டனர்.மணப்பாறை - குளித்தலை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.