நாமக்கல்: நாமக்கல் நகரில் விட்டுவிட்டு பெய்த சாரல் மழையால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நனைந்தபடி சிரமப்பட்டு சென்றனர். சிறு வியாபாரிகளின் விற்பனையும் பாதிக்கப்பட்டது.வங்க கடலில், சென்னை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்த நிலையில், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், சென்னை வானிலை மையம், நேற்று மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுத்திருந்தது. மேலும், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது.ஆனால், மாவட்டத்தில் கனமழை இல்லை என்றாலும், சாரல் மழை பெய்தது. அதன்படி, நாமக்கல் மாநகரில், காலை, 8:45 மணிக்கு மிதமான மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரம் நீடித்தது. அதேபோல், காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அதன் காரணமாக, மக்கள் மழையில் நனைந்தும், குடைபிடித்தும், ரெயின் கோட் அணிந்தும் செல்வதை காணமுடிந்தது.குறிப்பாக, மாணவ, மாணவியர் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லுாரிக்கு சென்றனர். இந்த சாரல் மழை காரணமாக, சாலையோரம் கடை விரித்திருந்த சிறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.