| ADDED : ஜூன் 03, 2024 07:14 AM
ப.வேலுார் : கபிலர்மலை வட்டார விவசாயிகள், கோடைகால பயிர் சாகுபடி செய்ய வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கபிலர்மலை வட்டாரத்தில் கோடை மழை பெய்து வருவதால், இதனை பயன்படுத்தி வட்டார விவசாயிகள் பாசன நீர் குறைவாகவும், சாகுபடி காலம் குறுகியதாகவும் உள்ள பயிர்களான நிலக்கடலை, எள், உளுந்து, பாசிப்பயறு, சிறுதானிய பயிர்கள் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை பயிரிட்டு குறைந்த நீரில் அதிக மகசூலை குறுகிய காலத்தில் எடுத்து பயன்பெறலாம். கோடையில் மாற்றுப்பயிராக பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் போது அவற்றின் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து சேகரிக்கப்பட்டு மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. இதேபோல் குறைந்த வயதில் அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய எள் பயிரை கோடையில் சாகுபடி செய்யலாம். எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு, 2 கிலோ விதை அளவே போதுமானது. எள் பயிரானது அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக் கூடியது. நிலக்கடலை பயிரை நல்ல நீராதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம். சாகுபடிக்கு தேவைப்படும் இடுபொருட்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களையும், நுண்ணுாட்ட கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும் உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகிய இடுபொருட்களையும் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.எனவே, திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீராதாரம் உள்ள கபிலர்மலை வட்டார விவசாயிகள் கோடை கால பயிர் சாகுபடி செய்து அதிக மகசூலுடன் வருவாய் ஈட்டி கூடுதலாக மண்வளத்தையும் காத்து பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.