| ADDED : ஜன 11, 2024 12:06 PM
நாமக்கல்: 'மல்லிகையில் மகசூலை அதிகரிக்க, பஞ்சகவ்ய கரைசலை தெளிக்க வேண்டும்' என, விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடைகள், கோழிகள் மற்றும் வேளாண் வானிலை ஆலோசனை மையம் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட வானிலையில் கடந்த வாரம் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 65.3 டிகிரி பாரன்ஹீட்டாக நிலவியது. மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடனும், மிதமான மழை காணப்படும். பகல் நேர வெப்பம், 86 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவு நேர வெப்பம், 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும்.எனவே, மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள், மல்லிகையில் மகசூலை ஊக்குவிக்க இலை வழி தெளிப்பாக, 3 சதவீதம் பஞ்சகவ்ய கரைசல் மற்றும் லிட்டருக்கு, 0.4 சதவீதம் ஹியுமிக் அமில கரைசலை ஒரு மாத கால இடைவெளியில் தெளிப்பு செய்ய வேண்டும். அத்துடன் இரும்பு சல்பேட், 0.5 சதவீதம் கரைசல் மற்றும் துத்தநாக சல்பேட், 0.5 சதவீதம் கரைசலை தெளிக்க செய்ய வேண்டும். அதேபோல், தற்போது கரும்பு அறுவடை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள், தோகையை எரிக்காமல் தோகை துண்டடிக்கும் இயந்திரம் கொண்டு துண்டடித்து வயலிலேயே மட்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.