உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எருமப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி; 25 பேர் காயம்

எருமப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி; 25 பேர் காயம்

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே கருங்கரட்டில் நடந்த, ஜல்லிக்கட்டு போட்டியில், 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 25 பேர் காயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே போடிநாய்க்கன்பட்டி பஞ்., கருங்கரட்டில் அலங்காநத்தம் ஊர் பொது மக்கள் சார்பில், மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாமக்கல், தம்மம்பட்டி, ஆத்துார், மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 350க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.கால்நடை பராமரிப்பு துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து, காளைகளை அனுப்பி வைத்தனர். இதேபோல், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு. டோக்கன் வழங்கி உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.விழா குழு சார்பில், வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.ஒரு சில காளைகள், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் சிட்டாக பறந்தது. மேலும், சில சுத்து காளைகள் வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்டவுடன், மாடு பிடி வீரர்களை சுத்தி சுத்தி பந்தாடியதுடன், ஒரு சில காளைகள் வந்தால் மாடுபிடி வீரர்கள் பயந்து கம்பிகளில் ஏறி நின்றது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. எல்லை கோடு வரை காளையை பிடித்தவாறு சென்ற மாடுபிடி வீரர்களுக்கு, விழாக்குழு சார்பில், வெள்ளி கொலுசு, பணம், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.இதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு, டேபிள், சேர், பணம், தங்க காசு ஆகியவை வழங்கப்பட்டன.போட்டியில் காயமடைந்த, 25 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை