நாமக்கல்: ''முதல்வர் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் விரைவு வழிப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது,'' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பேசினார். ப.வேலூர் அருகே நடந்தை புளியம்பட்டியில், சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து பேசியதாவது:தமிழக முதல்வர், விரைவு வழி பட்டா வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் விரைவு வழி பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை கிராமங்களில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,விடமும், செவ்வாய்க்கிழமை பொறுப்பு கிராம வி.ஏ.ஓ.,க்களிடமும் பட்டா மாறுதல் மனுவை அளிக்கலாம். இம்மனுவுடன், கிரையப்பத்திர நகல் மற்றும் மூலப்பத்திர நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். பட்டா மாறுதல் விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் மூலம் வழங்கப்படும். மனு அளித்த இரண்டாம் வெள்ளிக்கிழமை, உட்பிரிவு உள்ள இனங்களுக்கும், நான்காம் வெள்ளிக்கிழமை உரிய பட்டா மாறுதல் உத்தரவு, சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, விபத்து நிவாரண உதவித் தொகையாக, 3 நபர்களுக்கு தலா, ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாயும், இயற்கை மரணத்துக்கான உதவித்தொகையாக, 15 நபர்களுக்கு, 12 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. நலிந்தோர் உதவித்தொகையாக, 16 நபர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும், திருமண உதவித் தொகையாக, 11 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 36 நபர்களுக்கு, 6 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், 19 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை உத்தரவு, 5 நபர்களுக்கு விவசாய கூலி உதவித்தொகை உத்தரவு, 8 நபர்களுக்கு உடல் ஊனமுற்றோருக்கான சான்று உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. பரமத்தி யூனியன் சேர்மன் பூமதி, நடந்தை பஞ்சாயத்து தலைவர்கள் ராமசாமி, பழினியப்பன், வேளாண் துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பிரபாகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.