நாமக்கல்: நாமக்கல் நகராட்சி அ.தி.மு.க., சேர்மன் வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், நாமக்கல் நகராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில், ஒன்றியச் செயலாளர் கரிகாலன் போட்டியிடுகிறார். அதேபோல், 39 வார்டுகளில், 34 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர், அமாவாசை நாளான நேற்று, அந்தந்த பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று, நாமக்கல் நகராட்சி சேர்மன் வேட்பாளர் கரிகாலன், தேர்தல் அலுவலரும், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலசந்திரனிடம், பகல் 12.45 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது, எம்.எல்.ஏ., பாஸ்கர், முன்னாள் எம்.பி.,க்கள் அன்பழகன், சரோஜா, வக்கீல் அணிச் செயலாளர் பாலுசாமி, வக்கீல் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, நாமக்கல்-மோகனூர் சாலையில், நகர அ.தி.மு.க., தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்து, தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் நல்லதம்பி, தொகுதி இணைச் செயலாளர் தென்னரசு, சிறுபான்மையினர் பிரிவு இணைச் செயலாளர் லியாகத்அலி, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.