மல்லசமுத்திரம்: பழமைவாய்ந்த, மூன்று கோவில்களில் பாலாலயம் மட்டுமே செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் நடக்காமல் இழுபறியில் உள்ளதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.மல்லசமுத்திரத்தில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட, 1,000 ஆண்டு பழமைவாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன.ஆனிமூல நட்சத்திரத்தன்று, இக்கோவில்களில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில்களில், திருப்பணி மேற்கொள்வதற்காக, கடந்த, மே, 23ல், செல்லாண்டியம்மன், சோழீஸ்வரர் கோவிலுக்கும்; மே, 9ல், அழகுராயபெருமாள் கோவிலுக்கும் பாலாலயம் செய்யப்பட்டது.மேலும், திருப்பணி மேற்கொள்ள அழகுராய பெருமாள் கோவிலுக்கு, 7.60 லட்சம் ரூபாய், சோழீஸ்வரர் கோவிலுக்கு, 24 லட்சம் ரூபாய், செல்லாண்டியம்மன் கோவிலுக்கு, 24.20 லட்சம் ரூபாய் என, மொத்தம், 55.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை இக்கோவில்களில் கட்டுமான பணி நடக்காமல் இழுபறியில் உள்ளதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கட்டுமான பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.