உண்மையான தொண்டருக்கு தான் சேந்தையில் சீட் கொடுக்கப்படும்
எருமப்பட்டி, ''சேந்தமங்கலம் தொகுதி நம் கோட்டை. இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் நமக்கு துரோகம் செய்து விட்டு சென்றனர். இனி அந்த தவறு நடக்காது. உண்மையான தொண்டருக்கு தான், 'சீட்' கொடுக்கப்படும்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்., பழனி நகரில், தே.மு.தி.க., சார்பில், 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' ரத யாத்திரை பேரணி நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, எருமப்பட்டி பழனி நகரில் இருந்து, ஐய்யர்மேடு வரை ரத யாத்திரையாக சென்றார். அப்போது அவர் பேசியதாவது:சேந்தமங்கலம் தொகுதி நம் கோட்டை. 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் நம் கட்சி வாகை சூடியது. அதேபோல், 2026 சட்டசபை தேர்தலிலும், தே.மு.தி.க., வெற்றி வாகை சூட வேண்டும். ஆனால், இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள், நமக்கு துரோகம் செய்து விட்டு மாற்று கட்சிக்கு சென்றனர். இனிமேல் அந்த தவறு நடக்காது. உண்மையான கட்சி தொண்டருக்கு தான், 'சீட்' கொடுக்கப்படும். தேர்தல் கூட்டனி குறித்து, கடலுாரில் நடக்கும் மாநாட்டில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.