நாமக்கல்: பி.டி.ஓ., அலுவலக நுழைவு வாயில், போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது. அவற்றை தவிர்க்க, அரசு நலத்திட்டங்கங்களை விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல் - மோகனுார் சாலையில், பி.டி.ஓ., அலுவலகம் உள்ளது. இங்கு, பல்வேறு பணிகளுக்காக, ஒன்றியம் முழுவதும் இருந்து, அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்கின்றனறர். அவர்களுக்கு, தங்களது விளம்பரம் சென்றடைய வேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும், விளம்பரம், வாழ்த்து போஸ்டர்களை, பி.டி.ஓ., அலுவலக நுழைவு வாயிலில் ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அவற்றை அவ்வப்போது, பி.டி.ஓ., அலுவலக பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து, போஸ்டர் ஒட்டும் கலாசாரத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். தற்போது, பி.டி.ஓ., அலுவலக நுழைவு வாயில், போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது. இது, சமூக ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது:பொதுமக்கள், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் அரசு நலத்திட்டங்களை பெறுவதற்காக, பி.டி.ஓ., அலுவலகம் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள நுழைவு வாயிலில், போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர். அவற்றை தவிர்க்கும் வகையில், நுழைவு வாயிலில் அரசு நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், எழுதி வைத்தால், உபயோகமாக இருப்பதுடன், அரசியல் கட்சி உள்ளிட்டோர் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க முடியும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, பி.டி.ஓ., மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.