| ADDED : மார் 17, 2024 02:58 PM
குமாரபாளையம்: குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி, 2023, நவ., மாதம் துவங்கி நடந்து வருகிறது. இதனால், 2023 டிச., 8 முதல் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சர்வீஸ் சாலையில் இரவு பகலாக எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல், ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு, பலரும் காயமடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற, மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதன்படி, குமாரபாளையம் துணை தாசில்தார் செல்வராஜ், பள்ளிப்பாளையம் உதவி பி.டி.ஓ., சொக்கலிங்கம், தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. குமாரபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ., முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.